நம் எல்லோருக்குமே அலை பாயும் மனதை பாதுகாப்பாக கட்டி வைக்க ஒரு நல்ல இடம் தேவை தான். பிரச்சனைகள் அதிகமாகி மூச்சு திணறும் போது, மனதை இந்த இடத்திற்கு கொண்டு வந்து, திடப்படுத்தி பின் வாழ்வை சந்திக்க அனுப்பி வைக்கலாம்.
சிறு வயதில் பேரிழப்பிற்கு ஆளானவர்கள், மன உணர்வுகளை கட்டுப்படுத்த இன்னும் அதிகம் சிரமப்படுவார்கள். அந்த பேரழிவு நிகழ்ச்சிகள் மூளையில் இருக்கும். பகுத்தறிவு மையத்தை அழுத்தி, உணர்வு மையத்தை தூக்கி வைப்பதன் விளைவு தான் இது. வாழ்வில் சில சம்பவங்கள், நபர்கள், ஏன் சில நடைமுறை பிரச்சினைகள், பழைய கசப்பான உணர்வுகளை எழுப்பி நம்மை ஆட்டி வைக்கும். உணர்வு எழுச்சியால், நாம் கலவரப்பட்டு, பொருத்தமில்லாத சொல்லையோ, செயலையோ நடத்தி வைப்போம்.
இந்த சமயங்களில், மனதை அந்த பாதுகாப்பு துறைமுகத்திற்கு எடுத்து செல்லலாம். இதற்கு நல்ல மனப்பயிற்சி வேண்டும். உங்கள் நண்பர் அல்லது தெரபிஸ்ட் உங்களுக்கு இந்த மனப்பயிற்சியின் போது உதவலாம். முதற்படியாக, வாழ்வில் இதுவரை உங்களுக்கு பிடித்த, அமைதியான இடங்களையும், அனுபவங்களையும் நினைவுபடுத்தி, எழுதிக்கொள்ளுங்கள்.
சிறுமியாக தோழியுடன் விளையாடிய இடம்.
தாத்தா வீட்டில் நாயுடன் ஓடும் இடம். பக்கத்தில் அவர் காட்டி தந்த கடற்கரை, சூரிய உதயம்.
பள்ளியில் சித்திரக் கலை பயிலும் கூடம்.
பாட்டி அன்புடன் தோசையோடு பாசத்தையும் தட்டில் பரிமாறி, நம்மை அணைத்து கொண்ட சமையலறை.
தோழனிடம் அடிக்கடி உரையாடிய அடையார் உட்லண்ட்ஸ் உணவகம்
ஊட்டியில் விடுமுறையில் தங்கிய ரிசார்ட்.
இந்த இடங்களை நினைக்கும் போது, அந்த பழைய உணர்வுகளையும் முழுமையாக தற்காலத்திற்கு கொண்டு வாருங்கள். அந்த சிலிர்ப்பையும், மகிழ்ச்சியையும், உள்ளடக்கத்தையும் நினைத்து சுவையுங்கள். அந்த அமைதியை, நல் நிலையை இப்போது முழுமையாக உணருங்கள்.
இந்த பழைய நல்ல இடங்கள், கலவரம், குற்றம், அவமானம், கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகளை நிலைப்படுத்தி, நல்லுணர்வை கொடுக்கும். உங்களின் சுய அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் அதிகரிக்கும்.
இந்த இணையதளத்தில் உள்ள மற்ற பயிற்சிகள் போல, இதுவும் செய்ய செய்ய வளரும் பயிற்சி தான். நன்கு பழகியவுடன், மன தாக்கத்தில் இருந்து சீக்கிரம் வெளியேற உதவும்.