குழந்தைப்பருவத்தில் ஏற்படும் பாலியல் வன்கொடுமையின் விளைவுகள் மிகவும் சிக்கலானவை. அன்பான மற்றும் ஆதரவான அமைப்புடன் கூடிய சரியான சிகிச்சை, குழந்தையின் மீட்புக்கு உதவுகிறது. மேலும், அதிர்ச்சியின் விளைவாக வெளிப்படும் தீங்கினால் விளையும் உளவியல் சவால்களைத் தவிர்க்கிறது. அவை ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் மாறுபடும். சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையிலிருந்து மீண்டு வர மேற்கொள்ளும் பயிற்சியில் அதிக நேரமும், முயற்சியும் தேவை.
வன்கொடுமைக்கு ஆளான பெரும்பாலான குழந்தைகளுக்கு, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளுடன் பணியாற்றுவதில் மிகவும் அனுபவம் கொண்ட ஒரு சிறப்பு நிபுணரின் உதவியைப் பெறுவது மிகவும் உதவியாக இருக்கும்.
ஒரு நிபுணரைக் கண்டுபிடிப்பதற்கான அவசரத்தை தீர்மானிப்பதில், முக்கியமாக வன்கொடுமை நடந்த சூழ்நிலை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இது ஒரு நெருங்கிய குடும்ப உறுப்பினரால் நடந்ததா? அல்லது நண்பராலா? அது தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததா? இது குழந்தையின் உணர்ச்சி அல்லது உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதித்திருக்கிறது என்பதெல்லாம் மிகவும் முக்கியம்.
சில நேரங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை ஒரு சிகிச்சையாளர் அல்லது ஆலோசகரிடம் கொண்டு வர தயங்குகிறார்கள். ஒரு குழந்தையை குணப்படுத்த உதவுவதற்கு பெரும்பாலும் நம்பகமான பெரியவர்களிடமிருந்து அன்பான ஆதரவும், பயிற்சி பெற்ற சிகிச்சையாளர் அல்லது ஆலோசகரின் உதவியும் தேவைப்படுகிறது.
இன்னும் சில பெற்றோர்கள் வெட்கப்படலாம், அல்லது வெளிப்புற உதவியை பெற பயப்படுவார்கள். மற்றவர்கள் ஆலோசனை உதவியை நாட விரும்ப மாட்டார்கள், ஏனெனில் வன்கொடுமையைப்பற்றி பேசுவதே குழந்தையை மோசமாக உணர வைக்கக்கூடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். இந்தியாவில், ஒரு சிகிச்சையாளரை அணுகுவது ஒரு பிரச்சனையாக இருக்கிறது, அதற்கு இந்த சமூகம் அதை பார்க்கும் விதமே முக்கிய காரணியாகும்.
இந்த உணர்வுகள் முற்றிலும் புரிந்துகொள்ளக்கூடியவை. ஆனால், ஒரு குழந்தைக்கு சரியான ஆலோசனையும் சிகிச்சையும் மற்றும் குடும்ப ஆதரவு வழங்கப்படாவிட்டால், மேலும் அவர்களின் அனுபவத்திற்கான பதிலை பாதுகாப்பாக வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்காவிட்டால், சிறுவயதில் ஏற்படும் பாலியல் வன்கொடுமையின் விளைவுகள் நீண்டகாலத்திற்கு அப்படியே மனதில் தங்கிவிடும்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு குழந்தைக்கு எந்தவொரு பயனுள்ள உதவிகளும் வழங்கப்படாதபோது, காலப்போக்கில் அவர்கள் வெளிப்படுத்தும் எந்த ஒரு விஷயத்திலும் பல சிக்கல்கள் இருக்கும். மீட்பு மற்றும் ஆதரவு கிடைக்காத குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்கள், பின்வரும் சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.
மற்றவர்களை நம்புவதில் சிரமம்
சுய மரியாதையை இழத்தல்
கவலை
தனிமை மற்றும் குற்ற உணர்வுகள்
தாழ்வு மனப்பான்மை
தன்னைத்தானே அழித்துக்கொள்ளுதல்
நெருங்கிய உறவுகளுக்குள் பிரச்சனைகள்
பாலியல் ரீதியான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள்
போதைப்பொருள் உபயோகித்தல்
உங்கள் குழந்தைக்கு அன்பையும், ஆதரவையும் கொடுப்பதன் மூலமும், அவர்களுக்கு தகுந்த சிகிச்சையை அளிப்பதன் மூலமும், உங்கள் குழந்தையின் குணமாகும் திறனை வலுப்படுத்தி வெற்றிகரமாக மீட்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.