பாதிப்புகள் இயல்பானதே. உங்களுடைய குழந்தை பருவ நினைவுகள் தினந்தோறும் உங்களை அலைக்கழிக்கும் பொழுது, நல்ல அடிப்படை விஷயங்களைக் கூட சுலபமாக புறக்கணிக்கலாம். இது மனச்சுமையை இன்னமும் அதிகரிக்கும்.
உங்களைப்பற்றி அக்கறையோடு நீங்கள் நினைப்பதும் உங்களை காத்துக் கொள்ள எடுக்கும் வழிமுறைகளும் உங்களை நிகழ்காலத்தில் வாழ வைக்கும்.
இந்த கணத்தை அனுபவித்து வாழ்வது, ஆரோக்கியமாக இருப்பது, உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள முயற்சி எடுப்பது - இவை சார்ந்த பழக்கவழக்கங்கள் தான் உங்கள் புது வாழ்வுக்கு அடிப்படை. இதற்கு முன்னுரிமை கொடுங்கள். இந்த பழக்கங்களை, தினப்படி நடவடிக்கையாக மாற்றுங்கள். நீங்கள் முக்கியம், உங்கள் உடல் முக்கியம் என்பதை உங்கள் மனதிற்கு புரிய வையுங்கள். மனதின் கோவில் அல்லவா நம் உடல்?
இந்த அடிப்படை பழக்க வழக்கங்கள் என்ன?
உணவு: பசியாக இருக்கிறீர்களா? சாப்பிட மறக்காதீர்கள். சத்தான உணவு வகைகளை உண்ணுங்கள். உணவு உங்களுக்கு சக்தியை வழங்குகிறது. நாம் ஒழுங்காக உணவு உண்ணாவிட்டால் வாழ்க்கையின் சவால்களை சந்திப்பதற்கு ஏற்ற எரிபொருள் நம்மில் இல்லாமல் போய்விடும். உணவு உண்ணுவதை ஒரு சரியான நடைமுறை வழக்கத்தில் கொண்டு வருவது முக்கியம். அதேபோல் உணர்ச்சிவசப்பட்டு அதிகம் உண்பது, தேவையில்லாமல் உண்பதை நீங்கள் தவிர்க்கலாம். அதேசமயம் அவ்வப்போது கிடைக்கும் விருந்துகளை மகிழ்சியுடன் அனுபவியுங்கள்! உணவுக்கும் மனச்சோர்வுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஒரு கட்டுரை இந்த இணைய தளத்தில் வர இருக்கிறது!
தாகம்: உங்களுக்கு தாகமாய் இருக்கிறதா? அதையும் அடிக்கடி சோதித்துக் கொள்ளுங்கள். தண்ணீர் நமக்கு இயற்கை தந்த வரம். நம்மில் பெரும்பாலோர் ஒவ்வொரு நாளும் நம் உடம்புக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க மறந்து விடுகிறோம். ஒரு தண்ணீர் பாட்டிலை நான் கூடவே வைத்துக் கொள்வேன், குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்று வரையறுத்துக் கொள்ள வேண்டும். மற்ற விஷயங்கள், மற்ற பானங்கள் நமக்கு சிறிது சபலம் ஏற்படுத்தினாலும் அதிக அளவு சர்க்கரை பானங்கள், மது ஆகியவை நம் மன ஆறுதலுக்கு உதவாது. அதேபோல அதிக அளவு காபி அல்லது டீ குடிப்பதும் சிறந்த விஷயம் இல்லை. அது மூலிகை தேநீராக, அதாவது காஃபைன் இல்லாமல் இருந்தால் நல்லது. இல்லையேல் இந்த விஷயங்கள் உங்களுக்கு கெடுதலையே தரும்.
தூக்கம்: நீங்கள் போதுமான அளவு தூங்குகிறீர்களா? அது உங்களுக்கு ஓய்வு தருகிறதா? தூக்கம் உங்களை புதுப்பிக்கிறது. பாலியல் கொடுமையிலிருந்து மீண்டு வாழ்பவர்கள், மன அழுத்ததிற்கு உள்ளானவர்கள், சரியான தூக்கத்தை பெறுவதில்லை. தூங்கும்போது உங்கள் உடம்பு புதுப்பிக்கப்படுகிறது. அதாவது தூக்கம் இல்லாமல் இருந்தால், விழித்துக்கொண்டே இருப்பீர்களானால் உங்களுடைய ஆரோக்கியம் கெட்டுப் போகும். நம்மை நல்ல தூக்கம், உடல் சார்ந்து, மனம் சார்ந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதிலும் ஒரு முறைப்பாடு அவசியம் தேவை. தினமும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுதல், அதேபோல் படுக்கைக்கு செல்வதற்கு முன் உடலினை தளர்த்திக் கொள்வது (relaxation exercise) உங்கள் உடன் பிறந்த சொத்துக்களான மொபைல் போன், லேப்டாப், ஐபேட் ஆகியவற்றை முடிந்தவரை உங்கள் படுக்கை அறைக்கு எடுத்துச் செல்லாமல் இருப்பது - எல்லாம் நன்மை தரும்.
உடற்பயிற்சி: அடிக்கடி நகர்ந்து கொண்டே இருக்கப் பழகுங்கள். ஒரு நாளைக்கு 2-3 முறை 10 நிமிடம் வீதம், ஒரு சிறிய நடை பயிற்சி அல்லது கைகால்கள் அசைத்தல் மிகவும் நல்லது. இணய தளத்தில் யோகா போன்ற பயிற்சிகள் உண்டு. சிறு உடல் பயிற்சியும் தளர்வாய் இருக்க வைக்கும் உங்களை புதுப்பிக்கும்.
இயற்கையை நோக்கிச் செல்லுங்கள். வெளியே, உங்கள் கட்டடங்கள் எனும் கான்கிரீட் சிறையை விட்டு வெளியே சென்று அதிகாலை சூரியனை உணருங்கள். அதனுடைய வருடி விடும் வெம்மையை உங்கள் உடம்பு முழுவதும் பரவச் செய்யுங்கள். முகத்தில் வந்து தழுவும் அந்த காற்றினை அனுபவியுங்கள். ஒரு வயலின் நடுவில் ஏதோ ஒரு தோப்பின் நடுவிலோ, எங்கு நீங்கள் பாதுகாப்பாக உணர்கிறீர்களோ அந்த இடத்திற்கு சென்று இயற்கையோடு இணைந்து இருங்கள்.
சுகாதாரம்: ஷவர் பாத் மூலம் குளியுங்கள் அல்லது ஒரு பக்கெட் தண்ணீரை நிதானமாக எடுத்து உங்கள் உடம்பின் மேல் ஊற்றிக் கொண்டு குளியுங்கள். தண்ணீர் மெதுவாக உங்கள் உடம்பெல்லாம் பரவி வழுக்கிக் கொண்டு செல்லட்டும். அது தரும் அந்த மன அமைதி உங்களை புதுப்பிக்கும். தண்ணீருக்கு புதுப்பிக்கும் சக்தி உண்டு. நம்மை சுத்தம் செய்வது மட்டும் குளியலின் நோக்கமல்ல. நம்மை புதுப்பித்தலும், மனதை ஒருநிலைப்படுத்த உதவுவதும், நமது ரத்த ஓட்டத்தை சீர் செய்வதும், நமது எண்ணங்களை ஒருநிலைப்படுத்துவதும் கூட குளியலின் முக்கிய வேலையாகும். இது நம் உடம்பிற்கு நாம் அதனை அக்கறையோடு பாதுகாக்கிறோம் என்று சொல்லும் ஒரு முயற்சியாகும். இது அடிப்படை சுகாதாரமும் கூட. அதேசமயம் மகிழ்வான, மனதிற்கு இதமான ஒன்றாகவும் இருக்கும்.
சுவாசம்: சுவாசிக்க மறக்கவேண்டாம். முக்கியமாக நீண்ட சுவாசங்கள் உங்களை அமைதிப்படுத்தும். இந்த மூச்சிழுத்தலை உடல் பயிற்சியாகவும் செய்யலாம். சாதாரணமாக நன்கு வெளிப்புறத்தில் இருக்கும் பிராணவாயுவை இழுத்து உங்கள் உள்ளுக்குள்ளே நிரப்பி அங்கேயே தங்க விட்டு சில வினாடிகளுக்கு பிறகு அதனை மெதுவாக வெளியேற்றுதல். இது எண்ணிக்கையில் செய்யப்படும் போது உங்கள் நுரையீரலுக்கு அபரிமிதமான சக்தியை வழங்குகிறது. உள்ளே செலுத்தப்பட்ட ஆக்சிஜன் உங்கள் உடம்பிற்கு மிகப்பெரிய வலிமையை உங்கள் ரத்தத்தில் கலந்து உங்களுக்கு தருகிறது.
உங்கள் மனதிற்கு சந்தோஷம் தரும் நிகழ்ச்சிகளைப் பற்றி யோசியுங்கள். கீழே தரப்பட்டிருக்கும் பட்டியல் உங்களுக்கு உதவக்கூடும் எந்த விஷயம் உங்கள் உடம்பை இந்தக் கணத்தில் வைத்திருக்கிறதோ அதைப் பற்றி யோசியுங்கள். உதாரணமாக, குளியல் தொட்டியில் வெதுவெதுப்பான நீரில் சோப்பு நுரை கலந்த தண்ணீரில் உடம்பை ஆழ்த்தி வைத்திருத்தல், ஒரு நல்ல கர்நாடக சங்கீதம் அல்லது வாத்திய இசை, ஏற்றப்பட்ட வாசனை மெழுகுவர்த்திகள், நடைபயிற்சி அல்லது உங்களுக்கு பிடித்த பழைய திரைப்படங்களை பார்த்தல்.
உங்களுடைய படுக்கையறையும் உங்கள் மெத்தையும் உங்களுக்கு சௌகரியமாக இருக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தனிமையான நேரம் தேவைப்படும்போது உங்களை உங்களுடைய மதிப்பு தெரிந்து உங்களை பாதுகாக்கும் அதேநேரம் மனதிற்கு அமைதியும் சந்தோஷமும் தரும் இடமாகவும் இதமான ஒரு ஓய்வு இடமாகவும், உங்கள் படுக்கை இருக்க வேண்டும்.
உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை அந்த மகிழ்ச்சிக்காகவே செய்யுங்கள். புத்தகத்தைப் படியுங்கள். உங்களுக்காக மட்டும் உங்கள் செல்லப் பிராணிகளோடு விளையாடுங்கள், உங்களுக்கு பிடித்த இசையை கேளுங்கள். உங்கள் வீட்டு தோட்டத்தை ஆராய்ந்து பார்த்து செடிகளை திருத்தி ஒழுங்குபடுத்தி புதிய செடிகளை நடுவது. அல்லது, ஏற்கனவே வளர்ந்து இருக்கும் பூக்கள் மற்றும் காய்களை பார்த்து மகிழ்வது ஆகியவற்றை செய்யலாம்.
உங்கள் உடல் உழைப்பாக எதையாவது செய்யலாம் அல்லது ஒரு புதிய கலையை கற்கலாம். உதாரணமாக நடனமாட கற்கலாம். நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள ஓட்டப்பந்தய அல்லது நடைபயிற்சி குழுக்களில் சேர்ந்து கொள்ளலாம். உடற்பயிற்சி எப்போதும் உங்களின் உள்ளே இருக்கும் அதிக உணர்ச்சிகளை நீர்த்துப் போகச் செய்து விடும், மேலும் நாம் நமது உடம்பில் மிகுந்த பாதுகாப்பாய் உணர்ந்திட உதவிடும்.
முழு மன தன்மையை ( Mindfulness) கற்றுத்தரும் வகுப்புகளில் சேர்ந்து உங்களுடைய நிகழ்காலத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க, நிகழ் பொழுதினில் வாழ்ந்திட பழகிக்கொள்ளுங்கள். இந்த அடிப்படை பழக்க வழக்கங்கள் உங்கள் குணமாகும் பயணத்தில் மிகவும் முக்கிய வாகனம் போல. சரியான இடம் பார்த்து, மண் போட்டு, வளம் சேர்த்து, தண்ணீர் விட்டால் தானே பூச்செடி வளரும், பூ மலரும்? இவைகளை தவறாமல் செய்தால், நீங்களும் உங்களில் மலர்வீர்கள்.