நன்றி உணர்வு - நம் மன நலத்திற்க்கு அடிப்படை! நாய்க்கு புரிந்தது நமக்கு புரியுமா?
ஒரு தினத்திற்கு 15 நிமிடங்களை ஒதுக்குங்கள். முடியுமா உங்களால்?
தினம் கூட வேண்டாம்.... ஒரு வாரத்திற்கு மூன்று முறை செய்யப்படும் நன்றி உணர்வு பதிவுகள், நமது சந்தோஷத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்கின்றன.
எப்படி செய்வது?
ஒரு நன்றி உணர்வு பதிவேட்டினை உருவாக்குவதில் தவறு என்பதே கிடையாது. ஆனால் நீங்கள் எழுதும்போது உதவுவதற்கு சில பொதுவான வழிமுறைகள் இங்கே தரப்பட்டுள்ளன.
நீங்கள் மிகவும் சந்தோஷமாய், நன்றி உணர்வுடன் எண்ணிப் பார்க்கும் ஐந்து விஷயங்களை எழுதுங்கள். நீங்கள் கையால் எழுதுவது அவசியம். இதை வெறும் எண்ண ஓட்டங்களாக உங்கள் மனதிலே செய்யாதீர்கள். நீங்கள் பட்டியலிடும் அந்த விஷயங்கள் மிகச்சிறியதாக கூட இருக்கலாம் ( மதியம் நான் சாப்பிட்ட அந்த ருசியான சமோசா) அல்லது பெரியதான ஒன்றாகவும் இருக்கலாம் (என் தங்கைக்கு அழகான ஆரோக்கியமான குழந்தை பிறந்தது).
அந்த செய்முறையின் குறிக்கோள் உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிகழ்வு, அனுபவம், மனிதர்கள் அல்லது பொருள்கள் ஆகியவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ளவே.
அதனோடு இணைந்து வரும் அந்த இனிமையான உணர்வினை அனுபவித்து மகிழ்வதற்கே.
நீங்கள் எழுதத் துவங்கும்போது நினைவில் கொள்ள 9 குறிப்புகள்.
1. முடிந்தவரை ஒவ்வொரு விஷயத்தையும் முழுவதுமாக குறிப்பிட்டு எழுதுங்கள். குறிப்பாக சொல்வது என்பது, நன்றி உணர்ச்சியை உணர்த்திடும் வழியில் முக்கியமான ஒன்றாகும். "என் சக ஊழியர்களிடம் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்" என்பதைவிட "என் சக ஊழியர்கள் நான் மிகுந்த தலைவலியோடு உட்கார்ந்திருக்கும் போது மாத்திரையும் சூடான காபியும் வாங்கி வந்து என்னிடம் தந்தார்கள். அவர்களுக்கு நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்" என்று சொல்வதே சரி.
2. அகலத்தில் செல்வதைவிட ஆழத்தில் செல்லுங்கள். ஒரு குறிப்பிட்ட மனிதரைப் பற்றியோ, அல்லது ஒரு விஷயத்தைப் பற்றியோ ஆழமாக விவரித்தல். அதற்காக, நீங்கள் எந்த வகையில் நன்றிக்கடன் பட்டு இருக்கிறீர்கள் என்று சொல்வது, நல்ல பலன்களைத் தரும். அதை விடுத்து அதிகமான விஷயங்களை மேலோட்டமாய் சொல்வதில் எந்த பலனுமில்லை.
3. தனிப்பட்ட வகையில் ஒருவரை பற்றி சொல்லுங்கள். நீங்கள் நன்றியோடு இருக்கும் ஒருவரை பற்றி கவனம் செலுத்துங்கள். அதை விடுத்து மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம்.
4. கூட்டலை விட கழித்தலை உபயோகித்து பாருங்கள். அதாவது சில பேர் அல்லது சில விஷயங்களும் இல்லாமல் உங்கள் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை குறிப்பிடுங்கள். அதை விடுத்து வெறும் நல்ல விஷயங்களை மட்டும் அடுக்கிக்கொண்டே போகாதீர்கள். நீங்கள் தப்பிவந்த எதிர்மறை நிகழ்வுகள், உங்களுக்கு வராமல் தடுக்கப்பட்ட பிரச்சனைகள், எதிர்மறையாய் வந்து நேர்மறையாக மாறிய விஷயங்கள் ஆகியவற்றை குறிப்பிடுங்கள். உங்களிடம் வரும் அந்த அதிர்ஷ்டத்தை அலட்சியப்படுத்தாதீர்கள்.
5. நல்ல விஷயங்களை "பரிசுகள்"என்று உணருங்கள். உங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களை பற்றி நன்றி உணர்வோடு யோசியுங்கள். அவற்றை அலட்சியமாக எடுத்துக் கொள்வதில் இருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கிடைத்திருக்கும் பரிசுகளை சந்தோஷத்தோடு உணர்ந்து நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்துங்கள்.
6. எதிர்பாராதது நடந்த நல்ல விஷயங்களை நினைத்து சந்தோஷமாய் இருங்கள். உங்கள் வாழ்க்கையில் நடந்த எதிர்பாராத ஆச்சரியப்படுத்தும் விஷயங்களை பதிவு செய்யுங்கள். இவை உங்களிடமிருந்து மிகவும் வலிமையான நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்த வைக்கும்.
7. திரும்பத் திரும்ப குறிப்பிடுவதை கவனமாக திருத்தி விடுங்கள். திரும்பத் திரும்ப ஒரே மனிதர்களைப் பற்றியோ விஷயங்களைப் பற்றியோ குறிப்பிடுவதில் தவறில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் அதில் வெவ்வேறு விஷயங்களை குறிப்பிட மறக்க வேண்டாம்.
8. தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் அடுத்தடுத்த நாட்கள் எழுதினாலும் அல்லது வாரம் ஒரு முறை எழுதினாலும், இதற்கென தொடர்ந்து எழுத ஒரு சரியான நேரத்தை ஒதுக்குங்கள். பிறகு அதனை மறக்காமல் கடைபிடியுங்கள். ஆனால்...
9. அதிகமாக செய்ய வேண்டாம். ஆராய்ச்சி முடிவுகள் சொல்வது என்னவெனில், அவ்வப்போது எழுதுதல் ( வாரத்தில் 1-3 முறை ) தினசரி எழுதுவதைவிட மிக்க பலன் தருவதாய் இருக்கிறது. ஏனென்றால், நாம் நல்ல விஷயங்களை மறக்கத் துவங்கி விடுவோம். நம்மை அதற்கு ஏற்றாற்போல் தகவமைத்துக் கொள்வோம். சிறிது நாட்களில் அந்த உணர்ச்சி மரத்துப் போய்விடும்.