ஒரு நண்பர் உங்களிடம் அவர்களுடைய தற்கொலை எண்ணத்தை பகிர்ந்து கொண்டால், நீங்கள் முதலில் அதிர்ச்சி அடையலாம், உணர்ச்சிவசப்பட்டு பேசலாம். உங்களுடைய பதில் எதுவாக இருந்தாலும் நீங்கள் முக்கியமாக எந்த ஒரு முடிவும் எடுக்காத நிலையில் இருப்பது அவசியம். மேலும் பொறுமையும் அவர்கள்பால் உண்மையான அக்கறையும் வெளிப்படுதல் அவசியம்.
இது சவாலான ஒன்றாக இருக்கும். மேலும் உங்களுக்கு இதுவரை பழக்கமில்லாத உரையாடலாகவும் இது இருக்கலாம் ஆனால் இதுவே இருவரின் வாழ்க்கை மாற்றத்திற்கும் காரணமாக அமையும்.
புரிந்து கொள்வதற்காக கவனித்துக் கேளுங்கள்.
அறிவுரை என்பதை தேவையில்லாத அல்லது கடைசியாக கேட்க வேண்டிய விஷயமாக நாம் எல்லோருமே ஏதோ ஒரு சூழ்நிலையில் உணர்ந்து இருக்கிறோம்.
அதற்கு பதிலாக அவர்களுடைய போராட்டத்தை உணர்ந்து கொள்ளுங்கள். அல்லது அவர்கள் அப்போது என்ன சொன்னார்கள் என்பதை யோசியுங்கள். அவர்களை தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க தூண்டுங்கள். எந்த ஒரு மனிதனும் தற்கொலை என்கிற எண்ணத்தை மிக மிக கடுமையான மன அழுத்த சூழ்நிலைகளை தவிர மற்ற நேரங்களில் யோசிப்பதில்லை.
கவனித்துக் கேட்கும் போது இதுவரையில் அவர்கள் எப்படி அதனை எதிர்கொண்டு வாழ்ந்தார்கள், மேலும் இதுவரையில் அவர்கள் உபயோகித்த அல்லது எடுத்துக்கொண்ட உதவிகள் என்னென்ன என்பதையும் கேட்டு தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். உதவி கேட்க வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்தி அதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
அவர்களுக்கு தெரிய வேண்டியது, அவர்கள் இன்னும் தேவையான உதவிகளை கேட்பதில் எந்த தவறும் இல்லை என்பதுதான்.
அவர்கள் ஏற்கனவே ஒரு மனநல மருத்துவரையோ அல்லது ஒரு ஆறுதல் தரும் தெரபிஸ்டையோ அணுக நினைத்து இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு எங்கே துவங்குவது என்பதைப் பற்றி தெரியாமல் இருக்கக் கூடும். அவர்களுடன் சென்று அந்த மருத்துவரை சந்திக்க ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி தருவது நன்மை பயக்கும். கூடவே ஒருவர் இருப்பது, இது போன்ற சமயங்களில் அவர்களை தனிமை உணர்வுகளிலிருந்து வெளிக்கொண்டுவரும். மேலும் நிச்சயமில்லாத தருணங்களை விலக்கி வைக்கவும் உதவும்.