சுய பராமரிப்பு என்பது ஒவ்வொரு நாளும் நம்மை நாம் கவனித்துக் கொள்வதற்கான நேரத்தை ஒதுக்குவது. ஆக்ஸிஜன் முகமூடியை அடுத்தவர்களுக்கு வைப்பதற்கு முன்பு அதை நாம் அணிந்து கொள்வதை நினைவில் கொள்வது போல். இதை விமானத்தில் பயணம் செய்யும் போது பாதுகாப்பு முறையாக, பயணம் செய்யும் குழந்தைகளின் பெற்றோருக்கு சொல்லப்படும் அறிவுரை. அதாவது உங்கள் குழந்தை அல்லது பிறருக்கு உதவுவதற்கு முன்பு ஆக்ஸிஜன் முகமூடியை முதலில் நீங்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்பதே.
இது நமக்கு, குறிப்பாக பெண்களுக்கு பொருந்தும். மற்றவர்களுக்காக நாம் மிகவும் உழைக்கின்றோம், நமது தேவைகளை மறந்து விடுகிறோம். சுய பராமரிப்பு நம் உடல், மனம் மற்றும் ஆன்மாவை மதிக்க கற்றுக்கொடுக்கிறது. அதன் பலனாக நாம் மிகவும் அமைதியான மனதுடன் வாழ்கின்றோம்.
உங்களை நீங்கள் கவனித்துக் கொள்ளாவிட்டால், உங்களை மட்டுமல்ல, மற்றவர்களையும் காயப்படுத்திவிடுவீர்கள். சுய பராமரிப்பு செய்து கொள்ளாவிடில் கோபம் அல்லது மனச்சோர்வு ஏற்படுவது மிகவும் எளிதானது.
நாம் தெரிந்து கொள்ளவேண்டியது: நம்முடைய தேவைகளை நாம் புறக்கணிக்கும்போது, அதன் விரக்தியை நாம் மற்றவர்கள் மீது வெளிப்படுத்துகிறோம். ஆனால், நம்மை நாம் சரியாக கவனித்துக் கொள்ளும்போது, ஒவ்வொரு நாளும் அற்புதமே. நாள் முழுவதையும் எதிர்கொள்ள நமக்கு அதிக ஆற்றல் கிடைக்கிறது.
நாம் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் நலமாக இருக்கின்றோம். சாத்தியமற்றதாகத் தோன்றும் விஷயங்கள் சாத்தியமாகும். அற்புதங்கள் நடக்கின்றன. நமக்குள் நாம் நன்றாக உணர்வதால், இந்த உலகமே நன்றாக இயங்குவது போல் இருக்கும். . ‘நமக்கு என்ன நடந்தது என்பது முக்கியமல்ல,நாம் எவ்வாறு எதிர்கொண்டோம் என்பதே இங்கு முக்கியமானது.
மன ஆரோக்கியத்தை பெற நாம் தினசரி செய்ய வேண்டிய சில ஆலோசனைகள்.
குறிப்பு:
இதில் ஏதேனும் ஒரு ஆலோசனையை நீங்கள் பின்பற்றலாம். அனைத்தையும் ஒரே நேரத்தில் முயற்சி செய்யாதீர்கள், அது கடினமானதாகி பின் நீங்கள் அனைத்தையும் நிறுத்திவிட வேண்டிவரும். ஒவ்வொன்றாக சிறு சிறு முயற்சிகள் செய்வோம். வாரத்தில் 3 முதல் 4 நாட்கள் செய்யலாம். அது சலிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.
நினைவில் கொள்ளுங்கள்:
நாம் முதலில் தொடர்ந்து தினசரி 5 நிமிடங்கள் மட்டுமே செய்தால் போதுமானது. அதற்கு மேலும் செய்யமுடிந்தால் நலமே.ஆனால் இந்த 5 நிமிடங்கள் ஒரு நாள் கூட தவறாமல் செய்தல் அவசியம்.
இதை காலையில் எழுந்தவுடனோ அல்லது இரவு படுக்கப்போகும் போதோ செய்யலாம். மதியம் உணவு இடைவேளையிலும் செய்யலாம்.
ஒரு நாளை தொடங்கும்போதோ அல்லது முடிக்கும்போதோ 5 நிமிட சுவாச பயிற்சி மற்றும் உடல்நீட்சி பயிற்சி செய்யுங்கள். யோகா, தாய் சீ மற்றும் உடல் நீட்சி பயிற்சி மிகவும் நல்லது.
நீங்கள் ஒரு கப் தேநீர் அல்லது காபி அருந்தும்போது டைரியில் உங்கள் உணர்வுகளை பதிவு செய்யுங்கள். டைரி எழுதுதல் ஒரு சிகிச்சை முறையாகும்.
ஒவ்வொரு நாளும் 5 முதல் 10 விஷயங்களை பட்டியலிடுங்கள். ‘இன்று தண்ணீர் கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்’, ‘அல்லது ஒரு பறவை பாடுவதைக் கேட்டதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்’ அல்லது ‘நான் இன்று எனது நண்பருடன் பேசியதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ‘போன்ற சிறு விஷயங்களாக கூட இருக்கலாம். நன்றியுணர்வு, கவலை மற்றும் மனச்சோர்வைக் குறைக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நமக்கு கிடைத்ததை நினைத்து நன்றியோடு இருப்பது நம்மனதை நன்றாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
இசையைக் கேளுங்கள், பாடுங்கள், நடனம் ஆடுங்கள் ,ஓவியம் தீட்டுங்கள் . அல்லது எழுதுங்கள். இவை அனைத்துமே உங்களின் படைப்பு ஆற்றலையும், ‘மகிழ்ச்சியான ஹார்மோன்களையும்’ வெளியிடுகின்றன.
ஊக்கமளிக்கும் மேற்கோள்களை படியுங்கள்.
பிரார்த்தனை செய்யுங்கள்.
தியானம் செய்யுங்கள்.
உடற்பயிற்சி , குதித்தல் , ஓடுதல் ஒரு நாளைக்கு 5 நிமிடமாவது செய்யுங்கள்.
உங்கள் செல்ல பிராணி மற்றும் குடும்பத்தினரை அணைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு மரம் அல்லது செடியைக் கவனியுங்கள், சூரியனின் உதயம் மற்றும் அஸ்தமனம் போன்ற இயற்கை அன்னை வழங்கும் விஷயங்களுக்கு உங்கள் நன்றிகளை தெரிவியுங்கள். நகரங்களில் கூட இந்த விஷயங்கள் உள்ளன!
மேலும் சில யோசனைகள்:
1 . சமூக ஊடகங்களில் குறைந்த நேரத்தை செலவிடுங்கள்.
2. வாரத்திற்கு ஒரு முறையாவது ஜூம், வாட்ஸ்அப் அல்லது கூகிள் சந்திப்பைப் பயன்படுத்தி ஒரு நண்பர் அல்லது நண்பர்கள் குழுவுடன் மகிழ்ச்சியாக பேசுங்கள்.
3. ஊரடங்கு அமலில் இல்லாதபோது தனியாக அல்லது நண்பருடன் நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள்.