சிறுவயது துன்புறுத்தல் பல வகைப்படும். அதில் சில உடல், சில உணர்ச்சி மற்றும் சில பாலியல். இது குழந்தையின் மூளை வளர்ச்சியின் ஒரு முக்கியமான கட்டத்தில் ஏற்படுவதால், குழந்தை வளரும்போது அது அதிக அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், விஞ்ஞானிகள் இந்த பாதிப்பிலிருந்து மீளக்கூடிய செயல்முறையை கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் இயல்பான, நிறைவான வாழ்க்கையை அடைய முடியும்.
சிறார் சீரழிவின் வகைகள்:
மனத்துன்பம்:
குழந்தைகளை மனதளவில் துன்புறுத்துதல் என்பதை இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று, அவர்களுக்குத் தரவேண்டிய அன்பையும் தராமல் அவர்களை உதாசீனப்படுத்துவது. இரண்டாவது வகை, சில தவிர்க்கவேண்டிய செயல்களை செய்வது: உதாரணமாக, புறக்கணிப்பு, நிராகரிப்பு, அவமானம், அவமதிப்பு, நியாயமற்ற எதிர்பார்ப்புகளை அமைத்தல் அல்லது குழந்தை கற்றுக்கொள்ள, அல்லது ஆராய்வதற்கான வாய்ப்புகளை கட்டுப்படுத்துதல்.
இது போன்ற செயல்கள் குழந்தையின் சுயமரியாதையையும் மற்றவர்களுடன் பழகும் திறனையும் எதிர்மறையாக பாதிக்கும். பெற்றோர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம், எல்லைகள் வகுத்தலில் குழப்பம், உணர்ச்சி ஒழுங்குமுறை இல்லாதிருத்தல், தங்களுக்கு ஏற்பட்ட வீட்டு வன்முறை, போதைப்பொருள், மது அருந்துதல் போன்ற பல காரணங்களால் இதைச் செய்யலாம். உணர்ச்சி ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படும் குழந்தைகள் பெரும்பாலும் மகிழ்ச்சியற்றவர்களாகவும், அச்சம்நிறைந்தவர்களாகவும், துயரங்களுடனும் உள்ளனர். அவர்கள் ஆக்ரோஷமான, சமூக விரோத அல்லது அவர்களின் வயதுக்கு மீறிய முதிர்ச்சியடைந்தவர்களாக இருக்கலாம்.
புறக்கணிப்பு நடவடிக்கைகள்:
ஒரு குழந்தையின் தேவைகளுக்கு ஒரு பெற்றோர் அல்லது பராமரிப்பாளர் போதுமான அளவு கவனத்தை வழங்கத் தவறும்போது புறக்கணிப்பு ஏற்படுகிறது. உதாரணமாக, உணவு, தங்குமிடம், ஆடை, மருத்துவ பராமரிப்பு, அன்பு, கவனிப்பு மற்றும் ஆதரவு, போதுமான மேற்பார்வை, பொருத்தமான சட்ட மற்றும் தார்மீக வழிகாட்டுதல், வழக்கமாக பள்ளி செல்லுதல். புறக்கணிப்பை பலவகை படுத்தலாம். அவை மேற்பார்வை புறக்கணிப்பு, உணர்ச்சி புறக்கணிப்பு, உடல் ரீதியான புறக்கணிப்பு, மருத்துவ புறக்கணிப்பு, கல்வி புறக்கணிப்பு மற்றும் அவர்களை ஒதுக்குதல்.
இந்த வகை துன்புறுத்தலின் அறிகுறிகள்உணர்ச்சி துன்புறுத்தலுக்கான அறிகுறிகளை ஒத்தவை. அவை குழந்தையின் வயதைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக, வளர்ந்த குழந்தைகள் தகாத முறையில் பேசலாம் அல்லது செயல்படலாம், மோசமான சமூக திறன்களைக் கொண்டிருக்கலாம், அடிக்கடி ஏற்படும் தீவிரமான உணர்ச்சிகளை அல்லது வெளிப்பாடுகளை நிர்வகிக்க போராடலாம்.
உடல் ரீதியான துன்புறுத்தல்:
உடல் ரீதியான துன்புறுத்தல் பயத்தை அடிப்படையாகக் கொண்டது. இது கணிக்க முடியாதது. இது பொதுவாக உணர்ச்சித் துன்புறுத்தலுடன் தொடர்பு கொண்டதாக இருக்கும்.
உடல் ரீதியான துன்புறுத்தல் எப்போதும் குழந்தையை காயப்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல. இது, பல சமயங்களில் ‘ஒழுக்கம்’ என்று நியாயப்படுத்தப்படுகிறது.
உடல் ரீதியான துன்புறுத்தலை எதிர்கொண்டவர்கள் எப்போதும் ஒருவித விழிப்புடன் இருப்பது, மற்றவர்களை நம்ப சிரமப்படுவது, எப்போதும் கோபத்துடன் இருப்பது, அல்லது அன்றாட பிரச்சினைகளுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள்.
குடும்ப வன்முறை:
இந்த வகை துன்பம், நெருங்கிய சொந்தங்களின் தவறான நடத்தை அல்லது வன்முறையால் ஏற்படுவது. இது அச்சுறுத்தல், கட்டுப்பாடு மற்றும் பயத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. ஒரு நபர் மற்றொருவர் மீது அதிகாரத்தை செலுத்தும் நிலையில் இருத்தல்தவறாகப் பயன்படுத்துவதால் இது ஏற்படலாம். இது உடல், பாலியல் மற்றும் உணர்ச்சி ரீதியான தாக்குதல்கள், பின்தொடர்தல், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து நபரை தனிமைப்படுத்துதல், பண ரீதியான துன்புறுத்தல், ஆன்மீகம் / கலாச்சாரம் என்ற பெயரில் துன்புறுத்துதல் முதலியன இதில் உள்ளடங்கும்.
குடும்ப வன்முறைக்கு சாட்சியாக இருக்கும் ஒரு குழந்தை நடத்தை மற்றும் உணர்ச்சி சிக்கல்கள், கற்றல் சிரமங்கள், நீண்டகால வளர்ச்சி பிரச்சினைகள், அமைதியின்மை, பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்படலாம்
பாலியல் துன்புறுத்தல்:
சிறு வயது பாலியல் துன்புறுத்தல் என்பது, வயதில் முதிர்ந்தவர்கள், பருவ வயதினர் அல்லது சிறுவர்கள் தங்கள் பலத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி வயதில் முதிர்ச்சியடையாத சிறார்களை பாலியல் செயல்களுக்கு அல்லது விஷயங்களுக்கு உட்படுத்துவது. மிரட்டல் மூலமாகவோ, பலத்தைப் பயன்படுத்தியோ அல்லது தந்திரமாகவோ அந்த நபர் இதை குழந்தைகளிடம் நிகழ்த்தக்கூடும்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் பின்வருமாறு இருப்பார்கள்: தனிமை படுத்திக்கொள்ளுதல். மகிழ்ச்சியற்று இருத்தல், தற்கொலை எண்ணம், சுய காயப்படுதிக்கொள்வது, கோபம் மற்றும் வன்முறை, படுக்கையில் சிறுநீர் கழித்தல், தூங்குவதில் சிக்கல், கெட்ட கனவுகள், சரியாக உணவருந்தாமல் இருத்தல் ஆகியன. இத்துன்பத்திற்கு ஆளான குழந்தைகளுக்கு பெரும்பாலும் இந்த அறிகுறிகள் அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பின்னும் தொடரக்கூடும்.
திட்டமிடப்பட்ட துன்புறுத்தல்:
திட்டமிட்ட துன்புறுத்தல் என்பது பல குற்றவாளிகள் பல குழந்தைகளை துன்புறுத்தல் செய்யும் செயலைக் குறிக்கின்றது. இந்த வகையில், குழந்தைகள் விபச்சாரம், சிறுவர் ஆபாச படங்களை உருவாக்குதல், கொடிய வினோதமான பாலியல் சடங்குகள் ஆகியவை உள்ளடங்கும். .
இந்த காணொளிகளை பார்க்கவும். சிறுவயது அதிர்ச்சியின் அறிகுறிகள், அதிர்ச்சியின் விளைவுகள்.
எந்த ஒரு குழந்தையும் ஏதேனும் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுவது உங்களுக்குத் தெரிய வந்தால் உடனடியாக துளிர் அல்லது காவல்துறையை தொடர்பு கொள்ளவும்.