எப்படி திட்டமிடுவது? தொடங்குவது? கட்டுபாடுடன் கடைபிடிப்பது?
உடற்பயிற்சிகளை தொடங்குவதற்கு முன்னர்:
உங்களுக்கு ஒரு மன நோய் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் அல்லது நீங்கள் ஒரு மனநல நிபுணரால் சிகிச்சையளிக்கப்படுகிறீர்கள் என்றால், உங்கள் சிகிச்சையில் உடற்பயிற்சிகளை எவ்வாறு இணைத்துக்கொள்ளலாம் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒரு தகுதிவாய்ந்த மனநல நிபுணர் உங்கள் குறிப்பிட்ட நிலைக்கு சிகிச்சையளிப்பதற்கான சிறந்த உத்திகளைப் பற்றி பரிந்துரைகளை வழங்க முடியும்.
உடற்பயிற்சி திட்டத்தை எவ்வாறு தொடங்குவது:
உங்கள் மருத்துவரிடம் ஒப்புதல் மற்றும் பரிந்துரையை பெற்ற பின், உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி திட்டத்தை தீர்மானிக்க வேண்டும்.
உங்களுக்கு ஏதாவது ஒரு வகுப்பில் சேர விருப்பமா?
ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்றுவிப்பாளரை நியமிப்பது உதவியாக இருக்குமா?
குறித்த ஒரு நேரத்தில் உங்களுக்கு பிடித்தமான பாடலைக் கேட்டுக் கொண்டு நடை செல்ல விருப்பமா?
இதில் எதுவானாலும் அது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க கூடியதாக இருக்க வேண்டும்.
உடற்பயிற்சி திட்டத்தைத் தொடங்க சில குறிப்புகள் இங்கே:
நிதானமாக செயல்படுங்கள்: ஆரம்பத்தில் மிகவும் அதிக தீவிரமாக உடற்பயிற்சி செய்வத்தை தவிர்த்து உடலில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். உடற்பயிற்சி செய்வது வேடிக்கையாகவும் உங்கள் மனநிலையையும் கவலையையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். மெதுவாக ஆரம்பித்து, படிப்படியாக உங்கள் உடற்பயிற்சிகளை காலப்போக்கில் அதிகரிக்கவும்.
உங்கள் உடற்பயிற்சி திட்டத்திற்கு கட்டுப்பட்டு இருங்கள்: பெரிய அலுவலக நிர்வாகிகளிலிருந்து வீட்டில் தங்கும் தாய்மார்கள் வரை அனைவரும் ஓய்வில்லாமல் இருக்கின்றனர். அதையும் மீறி உடற்பயிற்சிக்கு நேரத்தை ஒதுக்குவது என்பது உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. உங்கள் பீதி அறிகுறிகளில் முன்னேற்றம் காண்பதற்கு சிறிது சமயம் ஆகலாம். மிக நல்ல முடிவுகளுக்கு பொறுமையாகவும் உடற்பயிற்சி செய்வதில் கட்டுப்பாடுடனும் இருப்பது மிகவும் அவசியம்.
உங்கள் உடற்பயிற்சி திட்டத்தின் வெவ்வேறு கட்டங்களில் உங்கள் உந்துதல் மாறக்கூடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்: ஆரம்பத்தில் இருக்கும் உற்சாகம் காலப்போக்கில் குறைவது அசாதாரணமானது அல்ல. இது உங்கள் நடைமுறைகளை சிறிது மாற்றவோ அல்லது புதிய உடற்பயிற்சிகளை கண்டறியவோ உதவும். உதாரணத்திற்கு, உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்வது சலிப்பை ஏற்படுத்தினால் வெளியில் சென்று தனியாகவோ அல்லது குழுவாக நடக்கலாம். இந்த மாற்றங்களினால் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது மற்றவர்களின் நட்பையும் பெறலாம்.