கோபத்தின் அம்சங்களும் செயல்பாடுகளும்:
சில உணர்ச்சிகள் விரும்பத்தகாதவை அல்லது சங்கடமானவை என்றாலும், அவை ஒரு முக்கியமான நோக்கத்திற்கு உதவுகின்றன. உணர்ச்சிகள் அடிப்படையில் நம் உடல் நம்முடன் தொடர்பு கொள்ளும் ஒரு வழியாகும். அவை நாம் மற்றவர்களுடன் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், சுற்றுச் சூழலைப் பற்றி நமக்கு தகவல் அளிக்கவும், நடவடிக்கைகளுக்கு தயார் படுத்தவும், வாழ்க்கையின் அனுபவங்களை ஆழமாக்குவதற்காகவும் பயன்படுகின்றன. கோபம் என்பது கட்டுப்பாட்டை குறிக்கும் ஒரு உணர்ச்சியாகும். நாம் கோபத்தை அனுபவிக்கும் போது, விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை அல்லது ஏதோவொரு வகையில் கட்டுப்பாட்டை மீறுகிறோம் என்று நம் உடல் நமக்கு கூறும்.
ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வின் அனுபவம் உங்கள் கட்டுபாட்டை மீறச் செய்து பாதுகாப்பற்றதாகவும் ஆக்கிவிடும். உங்கள் வாழ்க்கையின் மீது உங்களுக்கு சிறிய கட்டுப்பாடு கூட இல்லை என்பதை நீங்கள் உணரலாம். PTSD (Post Trauma Stress Disorder அதாவது அதிர்ச்சிக்கு பின்வரும் மனஅழுத்த கோளாறுகள்)- யின் அறிகுறிகளினால் எப்போதும் எல்லா இடங்களிலும் ஆபத்து இருப்பதையும், அதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதையும் உணர்த்தும். PTSD யினால் நிகழும் உள் அனுபவத்தின் தீவிர ஏற்ற இறக்கங்கள் உங்கள் வாழ்க்கையை குழப்பமானதாகவும் கட்டுப்பாடற்றதாகவும் ஆக்கக்கூடும். இது கோபத்திற்கு வழி வகுக்கும். கோபம் பல சமயங்களில் ஆக்கப்பூர்வமானதாக இருந்தாலும், அழிக்கும் சக்தியும் உடையது.
ஆக்கப்பூர்வமான கோபம்:
Dr. Lisa Najavits என்பவர் அவருடைய பாதுகாப்பை நாடுவோம் புத்தகத்தில் ஆக்கப்பூர்வமான கோபம், குணப்படுத்தும் தன்மை உடையது என்கிறார். ஆக்கபூர்வமான கோபம் பெரும்பாலும் அழிவுகரமான கோபத்தைப் போல வலுவாக இருக்காது. இது உங்களை, உங்கள் நிலைமையை அல்லது மற்றவர்களை நன்கு புரிந்துகொள்ள உதவும். மேலும் ஒருவரின் கோபம் ஆக்கப்பூர்வமானதாக இருப்பதற்கு அதைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். ஆக்கப்பூர்வமான கோபம் சமாளிக்க கூடிய ஒன்று தான். ஆனால் அதற்கு முதலில் உங்ளது சுய தேவைகளையும் மற்றவர்களின் தேவைகளையும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
ஆக்கப்பூர்வமான கோபத்திற்கு ஒரு உதாரணம். நீங்கள் நண்பர் ஒருவருடன் மதிய உணவிற்கு ஏற்பாடு செய்திருந்ததை அவர் கடைசி நிமிடத்தில் ரத்து செய்து விடுகிறார். அப்போது உங்கள் கோபத்தை எதிர்கொண்டு அது உங்களிடம் என்ன கூறுகிறது என்பதை கேட்டு, உங்கள் நண்பரிடம் அவர் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததினால் உங்களுக்கு எவ்வளவு வருத்தமாக இருந்தது என்பதையும் அது போல் மறுபடியும் அவ்வாறு நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பேசுங்கள். இந்த இடத்தில் உங்களின் ஆக்கப்பூர்வமான கோபம் நிலைமையை கட்டுக்குள் வைப்பதுடன் உங்கள் சுய மரியாதையையும் காக்க உதவுகிறது.
அழிவுகரமான கோபம்:
அழிவுகரமான கோபம் ஆரோக்கியமற்ற முறையில் வெளிப்படுத்தப்பட்டு தீங்கையும் விளைவிக்கிறது. உதாரணத்திற்கு, அழிவுகரமான கோபத்தில் ஒருவர் மற்றவர் மீது வன்முறையாக நடந்து கொள்ளலாம். அந்த கோபம் தன் மேலேயே திரும்பி வேண்டுமென்றே தன்னையே துன்புறுத்திக் கொள்ளலாம் அல்லது பொருட்களை உபயோகித்து தீங்கு விளைவிக்க முற்படலாம். அழிவுகரமான கோபம் அடிக்கடி ஏற்படுவதுடன், வலுவாகவும் இருக்கலாம். PTSD இருக்கும் போது இந்த உணர்ச்சிகள் இன்னும் தீவிரமாக இருக்கும். சில நேரங்களில் அவர்களுக்கு அது கோபம் என்றே அறியாமல் இருக்கலாம் அல்லது தெரிந்திருந்தால் அதை கட்டுப்படுத்தவோ தவிர்க்கவோ முயற்சிக்கலாம்.
கோபத்தை அடக்காமல் இருந்தால் அது வலுவடையும். அந்த உணர்ச்சி வலுவடையும் போது அது மிகவும் ஆரோக்கியமற்றதாகவும் பெரும் தீங்கு ஏற்படுத்துவதாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். அழிவுகரமான கோபம் ஏற்படுவதால் குறுகிய காலத்திற்கு பதற்றத்தை குறைத்தாலும் எதிர் காலத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். முன் கூறிய உதாரணத்தில், உங்கள் நண்பருடன் கோபப்பட்டாலோ அல்லது அவருடன் உறவுகளை முறித்துக் கொண்டாலோ உங்களின் சமூக ஆதரவாக இருக்கும் ஒரு நண்பரை இழக்க நேரிடும். அந்த கோபத்தை உங்களின் மேலேயே காண்பித்து கொண்டால் அந்த நிலைமையை சமாளிக்க தெரியாமல் பிற்காலத்தில் அதே நிலைமை ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
கோபத்தை கையாளுதல்:
PTSD-யை எதிர் கொள்பவர்களுக்கு கோபத்தை கையாளுதல் மிகவும் கடினம். ஆனால் கோபத்தை பற்றி யோசித்து, அது உங்களுக்கு கொடுக்கும் தகவல்களை தெரிந்து கொண்டால், உங்களின் சுற்றுச் சூழலைப் பற்றி நன்கு அறிந்து கொள்வதற்கு உதவும். கோபம் ஏன் வருகிறது என்பதை புரிந்து கொள்ளுதல் குழப்பத்தை குறைக்கிறது. கோபம் மற்றும் வேறு பிற தீவிரமான உணர்ச்சிகளை சமாளிக்க பல வழிகள் உள்ளன.
உதாரணத்திற்கு, சுயமாக ஆறுதல் தேடுதல் அல்லது தனக்கென நேரம் ஒதுக்குதல். கோபத்தை கட்டுப்படுத்த சமூக ஆதரவை தேடிச் செல்லுதல் கூட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிற உணர்ச்சி ஒழுங்குமுறை உத்திகளும் கோபத்தை கட்டுப்படுத்த உதவக்கூடும். உங்கள் கோபத்தை சில காலத்திற்கு அழுத்தியே வைத்திருந்தால் அதை எதிர்கொள்வது மிகவும் சங்கடமாகி விடும். அது மிகவும் வலுவாக மாறி கையாள முடியாமல் போய் விடும்.ஆனால், கோபத்தை எதிர்கொண்டு ஆரோக்கியமான முறையில் கையாளுதல், நமது சகிப்புத்தன்மையை அதிகரிப்பதோடு எதிர்காலத்தில் கோபம் ஏற்பட்டால் அதை சமாளிப்பது மிகவும் சுலபமாகிவிடும்.