உணவுக்கு ஏங்குதல் என்பது ஒரு குறிப்பிட்ட உணவுக்கான தீவிர ஆசை என வரையறுக்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் ஒரு கால கட்டத்தில் குறிப்பிட்ட சில உணவுக்கு ஏங்குகிறார்கள். உங்களுக்கு மன அழுத்தம் இருக்கும்போதோ அல்லது மனம் சோர்வாக இருக்கும் போது மாவுச்சத்து நிறைந்த உணவுகளுக்கோ, சர்க்கரை மற்றும் சாக்லேட் ஆகியவற்றிற்கு ஏங்குவது ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
ஒரு குறிப்பிட்ட வைட்டமின் அல்லது தாது சத்தினை பெறாமல் இருப்பதை உங்கள் உடல் உங்களுக்கு தெரியப்படுத்துவது கூட உணவுக்கு ஏங்குதல் எனப்படும். வெள்ளை ரொட்டி, அரிசி, சாக்லேட் அல்லது ஐஸ்கிரீம் போன்றவற்றிற்கு ஏங்குவது பெரும்பாலும் நீங்கள் எப்படி உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என்பதோடு தொடர்புடையதாகும்.
உணவுக்கும் மனநிலைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி தெரிந்து கொள்வது, உணவு ஏக்கங்கள் உங்களை கட்டுப்படுத்த அனுமதிப்பதற்கு பதில் , நீங்கள் அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அளிக்கும். நீங்கள் ஏன் உணவுக்கு ஏங்குகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வதும், உங்கள் ஒட்டுமொத்த உணவு சரிவிகித சத்தான ஒன்றாக இருப்பதை உறுதி செய்வது மிக முக்கியமாகும்.
நமக்கு ஏன் உணவு ஏக்கங்கள் ஏற்படுகின்றன?
உளவியல் சார்ந்த அல்லது உணர்ச்சி வயப்பட்ட மன அழுத்தம்
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்
சில மருந்துகள் மற்றும் சுய மருத்துவம்
உடல் மற்றும் மன ஆரோக்கிய நிலைமைகள் (வகை 1 நீரிழிவு நோய், மனச்சோர்வு மற்றும் உண்ணும் கோளாறுகள் போன்றவை)
உணவு ஏக்கங்களின் நேர இடைவெளி மற்றும் தீவிரத்தை தீர்மானிக்கும் பல காரணிகள் உள்ளன. உடல் குறிப்புகளைக் காட்டிலும் நினைவுகளால் உணவு ஏக்கங்களை இயக்க முடியும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட உணவை தொடர்ந்து உண்டு வருவது இரண்டுக்கும் இடையே ஒரு மன தொடர்பை உருவாக்குகிறது.
பழக்கவழக்கங்களும், ஒன்றிற்கு அடிமையாவதும் எவ்வாறு உருவாகின்றன என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். உதாரணமாக, ஒவ்வொரு பிற்பகலிலும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிற்றுண்டியை சாப்பிட்டால், அந்த சிற்றுண்டிக்கான உங்கள் ஏக்கம் பசியைப் போக்க சாப்பிடுவதை விட , பழக்கத்தினால் சாப்பிடும் ஏக்கமாகி விடும்.
ஏன் சர்க்கரை ஏக்கம் ஏற்படுகிறது?
செரோடோனின் கோட்பாடு: மாவுச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் பிற சர்க்கரை உணவுகளுக்கான ஏக்கங்கள் மன நிலையை மேம்படுத்துவதற்கான விருப்பத்தால் உந்தப்படுகிறது என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக நம்புகிறார்கள். ஏனெனில் இனிப்புகளை உட்கொள்வது உங்கள் மூளையில் செரோடோனின் (மூளையில் உங்கள் மன நிலையை சமநிலையில் வைக்கும் ஒரு நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் ) அளவை அதிகரிக்கிறது.
செரடோனின் ஏற்றத்தாழ்வு நிலை மனச் சோர்வுக்கு வழி வகுக்கிறது என்பதை ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதனால் மாவுச்சத்து மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை உண்பது மனச்சோர்வுக்கு நமக்கு நாமே செய்து கொள்ளும் சிகிச்சை ஆகலாம்.
மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பதால் செரோடோனின் அளவு அதிகரிக்கும், ஆனால் அதிக கொழுப்புச் சத்து மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவுகளை உண்பதால் அவை குறையும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒருவர் மனச் சோர்வில் இருக்கும் போது மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதை விட சர்க்கரை நிறைந்த உணவு உண்ணும் ஏக்கம் அதிகமாக இருக்கும். மேலும் சர்க்கரை உணவுகளினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
டிரிப்டோபானின் பங்கு – டிரிப்டோபான் செரடோனின்னுக்கு முன்னோடியான ஒரு அமினோ அமிலமாகும். அதாவது, செரடோனின் உருவாக்குவதற்கு உடலுக்கு டிரிப்டோபான் தேவை. டிரிப்டோபன் குடல்-மூளை அச்சின் எல்லைக்குள் நிகழும் இடைவினைகள் மூலம் ஒரு "அமைதி விளைவை" உருவாக்கக்கூடும். டிரிப்டோபனின் அளவு குறைந்தால் பசியை அதிகரித்து உணவு ஏக்கங்களுக்கு வழிவகுக்கும், மேலும் மனச்சோர்வின் அறிகுறிகள் உருவாக வழிவகுக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிக டிரிப்டோபன் கொண்ட உணவு, நல்ல மனநிலையை அதிகரிக்கவும், உணவு ஏக்கங்களை நிர்வகிக்கவும் உதவக்கூடும். டிரிப்டோபன் இயற்கையாகவே கடல் உணவுகள், முட்டை மற்றும் கோழி போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளில் காணப்படுகிறது. இதை ஒரு துணை உணவாக மருந்து வடிவத்திலும் எடுத்துக் கொள்ளலாம்.
மனமும் உடலும் (குறிப்பாக குடல்) இணைக்கப்பட்டுள்ள விதம், பசியைத் தூண்டும் வழிமுறைகள், அத்துடன் நமது தனித்துவமான நினைவுகள், சுவைகள் மற்றும் உணவுத் தேவைகள் ஆகியவை உணவு ஏக்கங்களை மிகவும் சிக்கலாக்குகின்றன. இதன் பொருள் என்னவென்றால், நாம் உண்ணும் உணவைப் பற்றி கவனமாக இருப்பதன் மூலம் நம் மனநிலையை நாம் மாற்றியமைக்க முடியும்.