உணவு, இருப்பிடம் மற்றும் துணை இதற்கு பிறகு கதைகள் தான் இந்த உலகில் மிகவும் தேவையானவை. -பிலிப் புல் மேன்.
காயம் ஆறுதல் என்றால் என்ன? நம் உடலில் காயம் ஏற்பட்ட போது நாம் மருந்துகள் மற்றும் அதன்மீது கட்டுகள் கட்டி காயத்தை ஆற்றுவோம் காயம் காலப்போக்கில் ஆறி அந்த இடத்தில் சில தழும்புகளை விட்டுச் செல்கிறது. அது முன்பிருந்த காயத்தினுடைய மிச்சமாகக் காட்சி தருகிறது. உணர்வுகளால் காயப்பட்ட அனுபவமானது இப்போதும் அதிர்ச்சி, வலி, மனச்சோர்வு, மனதளவில் உடைதல் ஆகியவற்றை மட்டுமே விட்டுச்செல்லும்.
இதிலிருந்து ஆறுதல் பெறுவதற்கு சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது, முழுமனதோடு அவற்றை அறிந்து கொள்வது, இவற்றின் ஞாபகங்களை மீண்டும் தட்டி எழுப்பும் போது அல்லது முழுமனதோடு இவற்றை சமாளித்து ஏற்றுக்கொள்ளும் வழியில் பயணிக்க துவங்கும்போது ஒருவர் ஆறுதல் பெற துவங்குகிறார். ஒரு கதையை மனதிற்குள் வடிவமைப்பதோ அல்லது சொல்வதோ ஒருவரைப் பற்றிய முடிவின் வெளிப்பாடுதான்.
ஒரு கதையை சொல்வது என்பது அனுபவங்களுக்கு வடிவமும், அர்த்தமும் கொடுக்கும் ஒரு முயற்சிதான். கதை சொல்லுதலில் ஒரு முக்கிய பகுதி, ஒருவர் எவ்வாறு உணர்கிறார் என்பதை வெளிப்படுத்துவதும், நிகழ்வுகளில் கதை சொல்பவர் என்ன நினைக்கிறார் என்பதும் மிக முக்கியமான ஒன்று.
கதை சொல்வது ஏன் சிகிச்சை ஆகிறது?
சிகிச்சைக்கு மன வெளிப்பாடு மிகவும் முக்கியம் கதை சொல்லும்போது அந்த ஈடுபாடு தானாகவே வருகிறது. என்ன நடந்தது?, அது நடக்கும்போது ஒருவர் என்ன நினைக்கிறார்?, அது எப்போது நடந்தது? அதனுடைய தாக்கம் என்ன?. இவையெல்லாம் முக்கியமான தகவல்கள் ஆகும். வாழ்க்கையின் கதையை சொல்லும் போது அல்லது அவர்களுடைய அனுபவத்தை மீண்டும் விவரிக்கும்போது ஒருவர் இவற்றை சொல்லக்கூடும்.
ஒரு நிகழ்வு நடக்கும் போதோ அல்லது அதிர்வு ஏற்படுத்தக்கூடிய அனுபவம் நிகழும் போது அந்த தனிப்பட்ட நபர் தங்கள் மீதோ அல்லது அந்த சூழ்நிலையின் மீதோகட்டுப்பாட்டினை இழந்து விடுவார்கள். ஆனால் அதையே ஒரு தெரபிஸ்டிடம் அவரின் துணையோடு விவரிக்கும்போது அந்த கட்டுப்பாட்டினை செயல் படுத்த முடியும். மேலும் நடைமுறைக்கேற்றவாறு உணர்வுகளை கையாளவும் முடியும். ஆறுதல் தரும் செயல்பாட்டின் துவக்கம் இதுதான்.
கதை எப்படி உதவ முடியும்?
ஒரு தனிநபருக்கு எங்கு துவங்குவது என்பது தெரியாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். எப்படி அந்த அனுபவத்தை வார்த்தை ஆக்குவது? அல்லது அந்த நிகழ்வினை விளக்குவது? என்பது கடினமான ஒன்றுதான். ஒரு தெரபிஸ்ட் அந்த தனிநபரோடு சேர்ந்து, அவற்றை எப்படி வார்த்தையாக கோர்த்து கதையாக வெளிப்படுத்துவது என்பது பற்றி கூடவே பயணம் செய்து எளிமையாய் சொல்லித் தருவார்கள். ஆகவே அந்த நபர் ஊக்குவிக்கப்பட்டு, அவர்கள் கதை சொல்வதில் ஒரு தெளிவும் தொடர்ச்சியான நிகழ்வும் ஏற்படும்.
இதை மற்றொரு வகையாகவும் செயல்படுத்த முடியும். அந்த தனிநபர் அவருடைய கதையை சிறுசிறு விஷயங்களாக சொல்லும்போது, முக்கியமான நிகழ்வுகளை குறித்தும், கதாபாத்திரங்களை பற்றி தெளிவாக விவரிக்கும் படி அவருக்கு சொல்லிக்கொடுத்து, கதையில் வேண்டிய திருத்தங்கள் செய்து, தேவையானவற்றை கூட்டியும், வேண்டாதவற்றை நீக்கியும் அந்தக் கதைக்கு வடிவம் கொடுத்து, அதை அவரை விட்டு சொல்ல செய்வார்கள்.
இதை கற்பனை செய்தல்,உரையாடுதல், மீண்டும் சொல்லுதல் ஆகிய இந்த செயல்பாடுகள் அவர்களுக்கு அந்த நிகழ்வினை மனதிலிருந்து அதிர்ச்சியாக தந்திடும் பாதிப்பினை நீக்கிடும்.மேலும் எதிர்கால வாழ்வினை நிம்மதியாக வாழ்வதற்கு உதவி செய்யும்.
ஒரு கதையை சொல்வதற்கு தயாராகும்போது அல்லது சிகிச்சையாக அதை பயன்படுத்தும் போதும் கீழ்காணும் இந்த செயல்முறைகளை அதில் உபயோகிக்கலாம்.
1. கதையை யோசித்து உணர்வுபூர்வமாக மனக்கண்ணில் வடிவமைத்து கற்பனை கலந்து அதற்கு வடிவம் கொடுக்கலாம்.
2. கதையை எழுதலாம்.
3. கதையை வரையலாம்.
4. கதையை சொல்லலாம் (அதில் ஒரு கதாபாத்திரமாகவோ அல்லது கதை சொல்பவராகவோ) ஒருவருக்கோ அல்லது நிறைய பேருக்கோ.
5. கதையைப் பாட்டாகவும் அல்லது ஒரு மந்திரம் போல உச்சரிக்கலாம் (இசையோடு கலந்து சொல்லுதல், ராகமாக பாடுதல் அல்லது வித்தியாசமான முறையில் உச்சரித்தல்)
6. கதையை நாடகமாகவும் அல்லது நடனமாக கூட சொல்லலாம் (அசைவுகள், அபிநயங்கள், நடன முத்திரைகள் பல்வேறு விதமான நகர்வுகள் ஆகியவற்றை கலந்தும் தாளத்துக்கு ஏற்ப ஆடியும் காண்பிக்கலாம்)
7. கதையை விவாதித்தல்.
சிலர் எப்போதுமே எந்த ஒரு அனுபவத்தையும் விவரிக்கவே விரும்புவார்கள் அது அவர்களுக்கு ஒரு திருப்தியை தரும். ஆனால் மற்ற ஒருவருக்கு தங்கள் கதையை சொல்லும் போது அவர்கள் அதை அங்கீகரித்தால் சொல்பவருக்கு அது மிகவும் எளிதாக ஆழ்மனதில் இருந்து வெளியேறும். இதை நிச்சயமாக ஒரு நச்சரிப்பு அல்லது தேவையற்ற வீண் பேச்சு என எடுத்துக்கொள்ளக் கூடாது. இது அந்தத் தனிநபரின் மன வேதனைக்கான வடிகால் மற்றும் ஆறுதலின் ஒரு அங்கம், அவருடைய வேதனைக்கும் ஒரு முடிவாக இது உதவும்.
ஒரு தனிநபர் கதையைச் சொல்லத் தொடங்கும் போது அதில் உள்ள முக்கிய தகவல்கள் மற்றும் தரவுகளை அங்கீகரித்தல் அவசியம். இது அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ள வழிவகுக்கும் இந்த நிகழ்வுகளை அவர்கள் வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு பிறகு அவர்களுடைய வாழ்க்கையும் ஏற்றுக் கொள்வது அவர்களுக்கு எளிதாய் அமையும்.
வேறு மொழியில் சொன்னால் இது அந்த தனிநபரை தங்களைத் தாங்களே எந்தவிதமான வரையறையும் கட்டுப்பாடும் இன்றி ஏற்றுக் கொள்ளவும், எந்த ஒரு தீர்மானமும் இல்லாமல் போட்டுக் கொள்ளவும் இது வழிவகுக்கும் இதனால் அந்த தனி நபர் வாழ்க்கையின் அந்த அனுபவத்தை ஏற்றுக் கொண்டு காயம் ஆறுதல் செய்முறையை துவங்கி விடுகிறார்.
இந்த மொத்த அனுபவமும் ஏற்றுக்கொள்ளுதல்- அங்கீகரித்தல்- உள்வாங்குதல் என்கிற ஒரு தனிநபர் செய்முறையை செயல்படுத்தி சுய ஆறுதல் பெரும் ஒரு பயணத்தின் முக்கிய படியாகும்.