அந்த தெரபிஸ்ட் சொல்வதை கேட்ட பின், லக்ஷ்மிக்கு மூக்கு வரை கோபம் வந்தது.
ஆனால், மனதிற்குள் எங்கேயோ, அவர் சொல்வது உண்மை தான் என்று பட்டது.
"அடிபட்டவரின் மேல் பழி சுமத்துவது எல்லா சமூகத்திலும் இருக்கும் மிக பழைய பழக்கம் தான். சில சமயங்களில், நடந்த கெடுதல்களுக்கு ஒரு காரணம் தேடுவது இயற்கை. அதனால், கெடுதல் செய்பவரை விட்டு விட்டு, வாயில்லாதவரையும், கொடுமைக்கு உள்ளான சிறுவர்களையும் பழிக்குள்ளாக்கறோம்." என்று தொடர்ந்தார்.
நினைத்து பார்க்கும் போது, இது நன்றாக புரிந்தது. தன் சிறுவயதில் நடந்த விஷயங்கள் நினைவுக்கு வந்தன. வீட்டு பெரியோர்களுக்கு, சில சமயம் விஷயம் தெரியாமலே பழி போடுவது, ஒரு வகையில் ஒரு முடிவை தந்தது.
"எப்படி என் பொண்ணுட்ட கவனமா நடந்துக்கும்மா, இந்த மாதிரி அபாயங்களை நெருங்காமனுட்டு? அது அம்மாங்கற என் கடமை இல்லையா?"
"டீனேஜ் சிறுவர்கள் நம்மள விட அதிகம் ரிஸ்க் எடுப்பாங்க. நமக்கு ஒண்ணும் தவறா நடக்காது என்ற எண்ணம். உலகத்தை பற்றி எச்சரிக்கறது நம்ம கடமை தான். கட்டுப்படுத்தணும்னுட்டு சொல்லாம, ஒரு விளக்க ரீதியில் சொன்னா, அத உங்க பொண்ணு கேட்க வாய்ப்பு இருக்கு."
"பொறுப்பும் பழியும் இரு தனி விஷயங்கள். உங்க பொண்ணு, தன்னை பராமரித்து, பொறுப்பாக நடக்கணும் தான். ஆனா, தவறு நடந்தால், பழி தவறு செய்தவர் மேல் தான்." என்றார். இது மெதுவாக லக்ஷ்மிக்கு புரிய ஆரம்பித்தது.
சமூகம் ஒரு பிரச்சாரம் செய்கிறது - நமக்கு நடக்கும் தீமைகளில் நமக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று. இந்த தவறான செய்தி, தீமை செய்பவருக்கு அனுகூலம் செய்கிறது, அவர் முழு பங்கை குறைக்கிறது. இந்த பழி, தீமை அனுபவித்தவரை இன்னும் கொடுமைப்படுத்தி, அவர்களை விளைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்க வைக்கிறது.
லட்சுமி தொண்டையை கனைத்து கேட்டாள். "இது உண்மை தான். ஆனால் நான் சட்டென்று பெண்ணிடம் சொல்லி விட்டேன் "இது நீ செய்யாமல் இருந்தால், இந்த விஷயம் நடந்திருக்காது" என்று. இந்த வார்த்தைகளை ஏன் சொன்னேன்? அவற்றை திரும்பி பெற எண்ணுகிறேன்."
அவர் நிமிர்ந்தார் - "உங்கள் பெண் அதிர்ஷ்டக்காரி. அநேக பெற்றோர்கள் இதை தவறு என்று எண்ண மாட்டார்கள். முழு மனதோடு, இந்த வார்த்தைகளை திரும்பி வாங்க மாட்டார்கள். நீங்கள் இந்த வார்த்தைகளை அழிக்கலாம். பல தடவை , "இது உன் தவறல்ல - யார் என்ன சொன்னாலும்" - என்று சொல்லி கொண்டே இருங்கள். உங்கள் பெண்ணின் மீளுமைக்கு இது நல்ல அஸ்திவாரம்."
லட்சுமி ஆழமாக நல்ல மூச்சு ஒன்று எடுத்தாள். நடந்த விஷயத்திலிருந்து வெளி வர தவிக்கும் தன் அருமை பெண்ணிற்கு, இது தன்னுடைய தவறு என்னும் பழி அவசியமில்லை. "இது உன் தவறல்ல" எவ்வளவு தடவை வேண்டுமோ, அவ்வளவு முறை இதை சொல்லி, அந்த களங்கத்தை உடைக்க வேண்டும் என்ற முடிவு அவள் மனதில் அழுத்தமாய் எழுந்தது.